தமிழ்ப்பணி

தமிழ் வழிக் கல்வி இயக்கம்

மறைமலை அடிகளார் 'தனித்தமிழ் இயக்கம்' கண்டது போல்,வ.சுப.மா. 'கல்வித்துறையில் எங்கும் எதிலும் தமிழ் ஒன்றே பயிற்று மொழியாதல்;மழலைப் பள்ளி எல்லாம் தமிழ் வழிப் பள்ளியாதல்' என்னும் கொள்கையினைப் பரப்பும் நோக்கில் "தமிழ் வழிக் கல்வி இயக்கம்" கண்டார்.இயக்கத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று, தமிழகம் முழுவதும் தமிழ் பரப்பவும் பிற மொழித் தாக்கத்தை தீர்க்கவும் தமிழ் யாத்திரைதொடங்கினார்.இயக்கத்தின் செயல் நோக்கங்களையும்,கருத்து விளக்கங்களையும் ,பரப்பு நெறிகளையும் தெரிவித்து அவர் ஓர் அருமையான மொழி அறிக்கையை வெளியிட்டார்.இம் மொழியறிக்கையின் வாயிலாக வ.சுப.மா.வின் தமிழுணர்வினையும்,திட்டமிடும் பாங்கினையும்,தொலைநோக்குப் பார்வையினையும் நன்கு உணர்ந்து கொள்ளலாம்.

'தமிழ் வழிக் கல்வி இயக்கம்' போல் வ.சுப.மா. தாம் வாழ்நாளில் முடித்துக் காட்டிய பிறிதோர் அருஞ்சாதனையும் உண்டு.தில்லைத் திருக்கோவிலில் பொன்னம்பலத்தின்கண் நின்று திருமுறைகளை ஓதி வழிபடும் வாய்ப்பு அண்மைக்காலம் வரை இல்லாமல் இருந்தது;வேண்டாத-பொருந்தாத -இம் மரபுக்கு எதிராகப் பேராசிரியர் வெள்ளைவாரணார் போன்றோரின் துணையோடு போர்க்கொடி உயர்த்தி, தாம் போராட்ட முயற்சியில் வெற்றியும் பெற்றார் வ.சுப.மா.

இங்ஙனம் எந்தப் பொறுப்பான பதவியிலும் இல்லாத நிலையில் வ.சுப.மா. தமிழுக்கும்,தமிழர்க்கும்,தமிழகத்திற்கும் ஆற்றிய தொண்டுகளைப் போற்றும் வகையிலே முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ,.விசுவநாதம்,"அப்பெருமான் (வ.சுப.மா.)மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து செய்த தமிழ்த் தொண்டுகளைவிட பதவியைவிட்டு விலகிய பிறகு செய்த தமிழ்த் தொண்டுகள் மிகப் பலவாகும்" என மதிப்பீடு செய்துள்ளார்.

VSP Manickam