மாமலர்கள்

நல்லாவின் பால்முழுதும் கன்றுக்கில்லை;
நறும்பூவின் மணமுழுதும் சோலைக்கில்லை;
நெல்லாகும் கதிர்முழுதும் நிலத்துக்கில்லை;
நிறைகின்ற நீர்முழுதும் குளத்துக்கில்லை;
பல்லாரும் கனிமுழுதும் மரத்துக்கில்லை;
பண்ணரம்பின் இசைமுழுதும் யாழுக்கில்லை;
எல்லாமே பிறர்க்குழைக்கக் காணுகின்றேன்;
என் வாழ்வும் பிறர்க்குழைக்க வேண்டும்! வேண்டும்!

கொடை விளக்கு

கோடி கொடுத்த கொடைஞன்;குடியிருந்த
வீடும் கொடுத்த விழுத்தெய்வம்-தேடியும்
அள்ளிக் கொடுத்த அழகன்;அறிவூட்டும்
வெள்ளி விளக்கே விளக்கு

மாணிக்கக் குறள்

மாணிக்கனாரின் தமிழ் உணர்வு, பற்று, மொழிக்கொள்கை, இனமான உணர்வு, அறக் கோட்பாடு, வாழ்வியல் நெறி, உலக நலம் அனைத்தையும் பொன்மொழியாய், நன்மொழியாய், புதுமொழியாய்ப் பதிவு செய்யும் இந்நூல் குறள் வெண்பாவில் அந்தாதி யாப்பில் அமைந்தது. தமிழாயிரமாய் எழுத நினைத்த இந்நூல் 506 பாடல்களாய் மாணிக்கக் குறளாக வெளிவந்துள்ளது.

VSP Manickam