வ.சுப.மாணிக்கனார் நூற்றாண்டு விழா

கிரேக்கத்தின் வீதிகளில் பட்டப்பகலில் கையில் விளக்கொன்றை ஏந்திக்கொண்டு எதையோ தேடிக்கொண்டிருந்தார் டயோஜெனஸ் என்ற தத்துவஞானி. திகைத்துப்போன ஊர் மக்கள், ‘எதைத் தேடுகிறீர்கள்’ என்று கேட்டதற்கு அவர்கள் முகத்துக்கு நேரே விளக்கைத் தூக்கிப் பிடித்து, உற்றுப் பார்த்து, உதட்டைச் சுளித்து, ‘நான் மனிதனைத் தேடுகிறேன்’ என்றார். அந்த முயற்சி, வெற்றி பெற்றதாகச் சரித்திரத்தில் எங்கும் பதிவாகவில்லை – நீண்ட நெடுங்காலமாக.

அவர் தேடிய அந்த ‘மனிதன்’, கீழைத்தேயத்தின் மேலைச்சிவபுரியில் 17 04 1917 இல் தோன்றினார் – மாணிக்கம் என்ற பெயருடன். பொய்மை, பகட்டு, தன்னலம், ஒழுக்கக்கேடு, நம்பிக்கையின்மை என வரலாற்றில் காலம் பதித்த வடுக்களின் ஆதிக்க சக்திகளை மீறி எழுந்து வாய்மை,எளிமை, தொண்டு, ஒழுக்கம், நம்பிக்கை என்னும் பண்புகளுடனும் போராட்டங்களை வெற்றிகொண்டு வாழவும் முடியும் என்று வாழ்ந்துகாட்டிய வள்ளுவம் அந்த ‘மனிதன்’.

அன்னாரது நூற்றாண்டு விழா, 17 04 2016 இல் தொடங்கவிருக்கிறது. தங்கள் கைவசமிருக்கும் அவர் தொடர்பான ஒளிப்படங்கள், ஒலிப்பேழைகள், விடியோப் பதிவுகள், கடிதங்கள், பத்திரிகைகளில் வெளியான தகவல்கள், துணுக்குகள் போன்றவற்றை விழாக்குழுவினருக்கு அனுப்பிவைக்குமாறு அன்பர்களை வேண்டுகிறோம்.

விழாக்குழுவினர் வெளியிடவிருக்கும் ‘வ சுப மா நூற்றாண்டு’ மலருக்குக் கட்டுரை அனுப்ப விரும்புவோர், இரண்டு பக்க அளவில் எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.

VSP Manickam